Saturday, September 1, 2018

குணபரேஸ்வரம் ?


வரலாற்றின் வழி நிற்கும் பல்லாயிரக்கணக்கான சுவடுகள் அறியாத வயதில், நான் படித்தவற்றை கதையாக எண்ணி கடந்து வந்தவை எல்லாம் ,கண் முன்னே காட்சியாக விரியும் போது ஒன்று நமது பழைய எண்ணத்தின் நினைவுகள் மீது வெட்கம் கொள்ளலாம்..இல்லையென்றால் கதையாக எண்ணி கடந்தவற்றை காலம்  நம்மை அவ்விடத்திற்கு இழுத்து வந்து சான்றை கண் முன்னே நிறுத்துகிறதெ என்று பெருவியப்பு அடையலாம்.

சிவபெருமானை வழிபட்டு ,பாடி ,கொண்டாடி மகிழ்ந்தவர்கள் நாயன்மார்கள் எனப்பட்டனர்.அவர்களுள் முன்னோடியாக மூவரை சொல்வர். தேவாரம் என்று அவர்களுடைய பாடல்கள் தொகுக்கப்பட்ட்தால் அவர்களை தேவார மூவர் என்றும் அழைப்பர்.அவர்களுள் மூத்தவர் திரு நாவுக்கரசர் என்ற பெயர் கொண்ட அப்பர்.


அப்பர் அடிகளின் வாழ்க்கை வரலாற்றில் அவர் சிவனடியாராக மாறுவதற்கு முன்பு மருள்நீக்கியார் என்ற பெயரில் சமண சமயத்தை சார்ந்தவராக இருந்ததும் பின் அவருடைய சூலை நோய் தீர அவர் தமக்கையின் சொற்படி சைவ சமயத்தை தழுவியதும் அதன் பின் சிவபெருமான் மீது பாடல் புனைந்து நாவுக்கரசர் என பெயர் பெற்றதும் அவர் வாழ்வின் தொடர் நிகழ்வு.

அப்பருடைய காலத்தில் சமண சமயத்தில் தீவிரமாக இருந்த மன்னன் அப்பரின் இந்த செயலைக்கண்டு பொறுக்காது அவரை சுண்ணாம்பு சூளையில் இட்டதும்,கடலில் எறிந்ததும் அவர் பாடல்களின் வாயிலாகவே அறியலாம்.

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே.

இப்படியெல்லாம் இம்சித்த அரசரை சிறிது காலம் கடந்து சைவ சமயத்திற்கு மருள்நீக்கியாராக இருந்த அப்பராக மாறிய திருநாவுக்கரசர் மாற்றுகிறார்.


சைவத்தின் வழிபாட்டுக்கு மாறிய அரசர் தான் முன்பு கட்டிய சமண கோவில்கள் சிலவற்றை இடித்து சைவ கோவிலாக மாற்றுகிறார்.இவையெல்லாம் படித்து கதைகளாக கடந்தவை.
வரலாற்றில் பல்லவ சக்ர்வர்த்தியாக மகேந்திரவர்மர் என்பவர் இருந்தார் ஆனால் அவர் தமிழ் நாடெங்கும் குடைவரை கோவில்களை எடுப்பித்தவர் என்றோ அதை நாம் இன்றும் காணமுடியும் என்றெல்லாம் எனது இருபது வய்தில் கூறியிருந்தால் சொன்னவரின் புத்தி சுவாதீனத்தை சந்தேகித்திருப்பேன்.


இன்று வரலாற்றை அதன் தடத்தை கண்முன்னே காணும் போது பல இடத்தில் பேச்சே எழவில்லை.அப்படித்தான் திருவதிகை சென்றதும் பெரிய கோவில் சென்று வந்த பின் வேறு எதுவும் கோவில் இருக்கிறதா என்ற வினாவில் கிடைத்தது இது..அந்த கோவிலுக்கு சென்று அந்த ஈசனின் பெயரை கண்டவுடனேயே வரலாறு கதையை காட்சிகளாக்கி அதன் புதிரை கண் முன்னே புரிய வைக்க ஆரம்பித்தது.


நீலாயதாட்சி சமேத குணபரேஸ்வரர். பல்லவ மன்னரின் பட்டப்பெயர்களுள் ஒன்று குணபரன்.மகேந்திரவர்மர் சமணத்திலிருந்து சைவத்திற்கு மாறி சமண கோவிலை சிவன் கோவிலாக மாற்றிய கோவிலாக இருக்கலாம்.கோவிலில் இருக்கும் பல்லவ கால கலையை நினைவூட்டும் ஈசனும் , ஈசனின் வலது புறம் அருளாசி வழங்கும் அதன் பின்னான பல்லவர் காலத்தை சேர்ந்த திருமாலும் அப்பரின் வரலாற்றை கண் முன்னே காட்சிப்படுத்துகிறார்கள்.

அப்பர் பிறந்த திருவாமூர் திருவதிகையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.


ஆயிரத்து முன்னூறு வருடங்கள் கடந்த வரலாற்றை கதையாக எண்ணிய என்னை போன்ற அறிவிலிக்கு காலம் காட்சிகளோடு சாட்சிப்படுத்தும் விந்தையை என்ன சொல்வது !

Monday, August 13, 2018

எக்காளம்


இசை என்பது இன்றைக்கு பெரும்பாலான மக்களின் எண்ணத்தில் திரைப்படப்பாடல்களாகவே உருமாறி போய்விட்டது. கொஞ்சம் மேல்  நிலை மக்கள் சபா ,சங்கீதம் ,கச்செரி எனவும் ஆங்கில நாளிதழ்களின் ஒரு பக்க செய்தியாகவும் சுருங்கி விட்ட நிலையில் , பல்வேறு விதமான ஓசையை உருவாக்க வெவ்வேறு விதமான கருவிகள் இருந்தன என்பதே வெறும் சொல்லாக மாறிப்போகலாம்,

சில ஆண்டுகள் முன்பு வரை நமது விழாக்களில் தவிர்க்காத அங்கமாயிருந்த இசைக்கருவிகள் இன்று சில பகுதிகள் தவிர்த்து அறுகி விட்டன.


எக்காளம் – சொல்லும் போதே ஒர் அதிகாரத்தொனி வருகிறதல்லவா !
இறைவன் வீதி உலாவுக்கு புறப்படும் போது முழங்க ,அரசர் நகர் வலம் வருவதை அறிவிக்க , சில சமயத்தில் போரில் குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் தகவல் தெரிவிக்க என்று புழக்கத்தில் இருந்த இசைக்கருவி .இன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே பயன்பாட்டில் இருக்கிறது.


கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு அடி கொண்ட பித்தளை உருளை குழாய் ஊதும் பகுதி வாய் வைக்கும் அளவிலும் ,மறுபுறம் புனல் வடிவில் ஒரு அடி அகல விரிவுடன் , நுரையீரலில் முழுதும் காற்றை இழுத்து அடி வயிற்றை எக்கி முழு பலத்துடன் தொய்வில்லாத ஊத குறைந்தது ஒரு கிலோ மீட்டர் வரை கேட்கும் .ஓசையற்ற இரவு பொழுதுகளில் மூன்று முதல் ஐந்து கிலோ மீட்டர் வரை கேட்கும்..மிகுந்த பயிற்சியும் திறனும் உடையவர்களே ஊதமுடியும்.இந்த கருவியும் அது எழுப்பும் ஓசையும் அருகிலிருப்பின் உடலை அதிரச்செய்யும்.சிறப்பாக ஊதக்கூடிய கடைசி தலைமுறை இவரே.
 

                             

இசைப்பதற்கு தானம் கொடுத்து , மரியாதை செய்து கோவில் சுவர்களில் வரலாற்றின் பக்கங்களாக பதிவு செய்யபட்டிருக்கும் எக்காளத்தை இன்று போற்றவோ புரக்கவோ எவரும் இல்லை..

Friday, August 10, 2018

திருந்துதேவன் குடி - நண்டாங்கோவில்


எப்போதாவது உங்களுக்கும் எனக்கும் தோன்றுவது தான்.சில நேரம் மன இறுக்கம், உளைச்சல், ஏன் காரணமற்று கூட தோணலாம். ஏகாந்தமாய் இருக்க .... ,சிந்திக்க அமைதியாய் இருக்க என மனிதராய் இருக்கும் நமக்கே இப்படி எனில் உலகாளும் ஈசனுக்கு தோன்றாதா !
தினசரி எவராவது ஒருவர் வந்து ,ஏதாவது வேண்டி ,உள்ளுக்குள் அமிழ்ந்து கிடக்கும் அமைதியை கலைக்க ,  எங்காவது ஏகாந்தமாய் இருக்க விரும்பிய இறைவன் பூவுலகில் இனிமையும் குளுமையும் அமைதியும் நிரம்பிய அந்த வனத்தை வந்தடைந்து தனக்குள் மூழ்கிப்போனார்.


கைலாயத்தில் கணவரை காணாது யோசித்த உமையாள் கணவர் எண்ணிய எண்ணம் உள்ளுக்குள் முகிழ்க்க சரி அவர் அவ்விடமே இருக்கட்டும்.நானும் உங்களுக்கு இடையூறின்றி உங்களுடன் இருக்கவே விரும்புகிறேன் என எண்ணி அந்த வனத்தில் வந்து நின்றார்.வனத்தை பார்வையிட்டார்.வனத்தை சூழ்ந்த அகழி கண்களில் பட அந்த யோசனை உருவாயிற்று. ஏன் இந்த சூழலோடு ஒத்த வடிவம் கொண்டு ஈசனோடு இருக்கலாமே என்று எண்ணிய கணத்தில்  நண்டாய் உருமாறினார்.தினசரி அகழியில் மலரும் தாமரை ஒன்றை பறித்து கணவரை பூஜித்து வந்தார்.
இப்படியான கால ஓட்டத்தில் தேவர்களின் தலைவரான இந்திரன் வரம் வேண்டி ஈசனை தரிசிக்க வந்தார். கைலாயத்தில் இறைவனை காணாது  நந்தி தேவரிடம், பூத கணங்களிடம் வினவ எவரும் ஈசன் சென்ற இடம் அறியாது இருக்க தனது மனம் குவித்து கைலாயத்தில் மிதந்த எண்ணங்களின் வழி இறைவன் சென்ற இடம் அறிந்து அங்கு பயணமானார்.


இறைவனின் ஒளி வீசும் திருமுகத்தை கண்டு ,மகிழ்ந்து அவர் தியானத்தை கலைக்காது அவர் கண் விழிக்கும் போது அவர் எதிரே இருந்து பேசலாம் என்று எண்ணி விழிகளை சுழல விட்டவர் அகழியையும் அதில் மலர்ந்து நிற்கும் தாமரை மலர்களையும் கண்டு ஈசன் தியானம் கலைத்து எழும் வரை இந்த மலர்களால் அர்ச்சித்து காத்த்ருப்போம் என முடிவெடுத்தார்;
இந்திரன் அல்லவா ! எதையும் பிரமாண்டமாக செய்தே பழகிய உள்ளமல்லவா ! ஈசனுக்கு தினமும் ஆயிரத்தெட்டு மலர்களால் அர்ச்சிக்க ஆரம்பித்தார்.


சில நாட்கள்; தடாகத்தில் எண்ணிய மலர்களில் ஒன்று குறைய எவர் என் ஆராதனையில் குறுக்கிடுவது என்ற ஐயம் எழ ஒருவரை தடாகத்துக்கு காவலாக நியமித்தார்.அப்படியும் எண்ணிக்கை குறைவது தொடர்ந்து நிகழ நியமித்தவரை கடிந்து கொண்டு தானே ஒரு நாள் கண்ணயறாது காவலிருந்தார்.இரவு முழுதும் எதுவும் நிகழாது கண் சலித்த வேளையில் ஒரு மலர் நீருக்குள் அமிழ்ந்து மறைந்தது.திடுக்கிட்ட இந்திரன் அதை  நோக்கி போக எத்தனிக்கையில் அந்த மலர் கரையில் ஏறுவதை கண்டார். அருகே செல்வதற்குள் அந்த மலர் வெகு வேகமாக  நகர பதட்டமடைந்த இந்திரன் வேகமாக ஒடி நெருங்கியவுடன் கவனித்த கணத்தில் கோபம் தலைக்கேறியது.ஒரு நண்டா எனது ஆராதனையில் குறுக்கிடுவது என்று வாளை உருவினார்..அதற்குள் அந்த  நண்டு ஈசன் மீது ஏறி அவ்ர் தலை மீது அந்த மலரை வைத்தது.


விநாச காலே விபரீத புத்தி என்ற வார்த்தையை மெய்ப்பிக்கும் விதமாக உன்மத்த்ம் கொண்ட இந்திரன் .ஈசனின் தலை மீதிருந்த நண்டை வெட்டினார்.  நண்டு ஊர்ந்து கீழிறங்க அடுத்த வெட்டு ஈசனின் தாடையில் கண்விழித்த கணப்பொழுதில் அனைத்தும் உண்ர்ந்த ஈசன் தன் தலை மீது ஒரு துவாரம் ஏற்படுத்தி தன் சகியை உள்ளிழுத்துக்கொண்டார்.
வெட்டப்பட்ட நண்டு மறைந்ததை கண்டு அதிர்ந்த இந்திரன் செய்த விபரீதத்தை உணரந்து நெடுஞ்சாண் கிடையாக ஈசனை சரணடைய ,தான் என்ற அகந்தை கொண்டு ஒவ்வொரு முறையும் உனது இன்னல்களுக்கு  நீயே கட்ட்டியம் கூறுகிறாய் இந்திரா ? நீ திருந்தவே மாட்டாயா ? என்று வினவிய வாறு புன்னகைத்தார் அந்த பரம்பொருள்.


ஐயனே அடாது செய்தேன்.பொறுத்தருள வேண்டும் என இறைஞ்சினார்.எவ்வுயிரும் காக்க வல்ல ஈசனுக்கு இந்திரனும் ஒர் உயிர்தானே மன்னிக்க மாட்டாரா ! 

தேவேந்திரன் மனம் திருந்தியதை ஈசன் மன்னித்து சகதர்மிணியுடன் காட்
சியளித்து கைலாயம் அடைந்தார்.

ஈசன் பூவுலகில் அமர்ந்து தியானித்ததும் , தேவேந்திரன் திருந்தியதும் ,உமையவள் நண்டு வடிவம் கொண்டு ஆராதித்ததால் நண்டாங்கோவில் ஆன திருந்து தேவன் குடி முதலாம் குலோத்துங்கர் காலத்தில் கற்றளி ஆயிற்று.


மருந்து, வேண்டில்(ல்) இவை; மந்திரங்கள்(ள்) இவை;
புரிந்து கேட்கப்படும் புண்ணியங்கள்(ள்) இவை
திருந்து தேவன் குடித் தேவர் தேவு, எய்திய
அருந்தவத்தோர் தொழும் அடிகள், வேடங்களே     . .


ஞானசம்பந்தரின் பாடலுக்கு இணங்க ஈசன் சோழ மன்னர் ஒருவருக்கு நோய் தீர்த்ததும் , கோவிலை விரிவு படுத்தும் பணியில் அம்பாளை காணாது ஒருவரை உருவாக்க முன்னவரும் பின்னர் கிடைக்க இருவரும் அபூர்வ  நாயகி என்றும் அருமருந்து நாயகி என்றும் வருவோர் குறை தீர்க்கின்றனர். ஈசனை முழுக்காட்டிய எண்ணெய் நோய் தீர்ப்பதும் அகழி சூழ அருமருந்து தாவர்ங்கள் சூழ உறையும் இறைவனை  நண்டை இராசியின் ,லக்னத்தின் அடையாளமாக கொண்டவர்கள்  நலம் பெறுவர் என்பது கர்ண பரம்பரை தகவல்.
 https://www.facebook.com/tamilparanthagan/posts/1638090083141157
எனது முதல் கோவில் சீரமைப்பு பணி இங்குதான் தொடங்கினேன் என்பதில் பேரானந்தம் எனக்கு.அந்த ஆனந்தத்தை  நீங்களூம் அடைய     நண்டாங்கோவில் – திருந்துதேவன் குடி வாருங்கள்J

Friday, February 2, 2018

கங்கராஜபுரம்



ஒரு கோவிலை கண்டறிவதற்காக இவ்வளவு நீண்ட தேடல் இதுவரை நிகழ்த்தியது இல்லை.ஒரு வேளை என்னுடைய தீவிரம் குறைவோ என்றும் எண்ணியிருக்கிறேன்.எப்போதுமே ஒரு விஷயத்திற்காக மட்டும் எங்கும் பயணப்படுவது கிடையாது.போகும் இடத்தை சுற்றி தொன்மையான இடங்கள் , விஷயங்கள் என்னென்ன உள்ளன என்று தகவல் சேகரித்தே செல்வது வழக்கம்.


இம்முறை எப்படியும் அந்த கோவிலுக்கு சென்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்துடன் தான் புறப்பட்டேன்.ஜவ்வாது மலை பயணத்துக்கு முதல் நாளே திருவண்ணமலை சென்று விட்டதால் அன்று திருவண்ணாமலையிலிருந்து செல்ல வேண்டிய இடங்களை நண்பரிடம் குறிப்பிட்டேன்.அவர் அதற்கான வரைபடத்தை தயார் செய்து விட்டார்.


காலை ஆறு மணிக்கு தொடங்கிய பயணம் ஆரணியில் நண்பரின் தோழியுடைய வீட்டில் சுவைமிகு உணவுடன் பசியாறி தொடர்ந்தது.ஒவ்வொரு இடமாக கண்டு, படம் பிடித்து கடந்து வருவதற்குள் மாலை மங்க தொடங்கிவிட்டது.திட்டமிட்டதில் சிலவற்றை விடுத்து அந்த கோவிலை நோக்கி பயணித்தோம்.


 http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/kambarajapuram-temple-in-ruins-near-vellore/article7403260.ece
செய்தித்தாளில் குறிப்பிட்டிருந்த வேலூர் அருகே உள்ள திருவலம் ஊரில்  விசாரித்தோம்.அப்படி ஒரு கோவிலே இல்லை என்றார்கள்.பலரிடம் விசாரித்தும் சரியான தகவலற்ற நேரத்தில் ஒருவர் கோவில் இல்லை மண்டபம் மட்டும் இருக்கிறது.அதுவும் இப்போது பார்க்க முடியாது.கரும்பு பயிரிட்டுள்ளார்கள் என்றார்.இவ்வளவு தூரம் நெருங்கி விட்டோம்.இடத்தை பார்த்து விட்டு போவோம்.பின்பு ஒரு நாள் வந்து பார்த்துக்கொள்ளலாம் என தொடர்ந்தோம். 


கோவில் இருப்பதற்கான எந்த தடயமும் இல்லை.இறங்கி அவர்கள் சொன்ன கரும்புக்காட்டுக்குள் நடந்தோம்.கரும்பு வெட்டிக்கொண்டிருந்தனர்.தூரத்திலிருந்தவர்களிடம் உரக்க கேட்டோம்.ஒன்றும் தகவலில்லை.கரும்புக்காட்டில் தோகைச்சுனை கிழிக்க அருகே சென்றோம்.இங்க மண்டபம் போல ஒன்னு இருக்கு பாருங்க என்றனர்.




ஈசனே என்று உள்ளம் மகிழ்ந்தோம்.வெறும் புதர்க்காடாக மண்டியிருந்த இடத்தில் கருங்கற்கள் தெரிய செடி கொடிகளை விலக்கி நுழைந்தோம்.சுற்றி வந்தோம்.


 கோவிலின் கருவறை மீது வளர்ந்திருந்த ஆலமரமும்,அதன் அருகே வாயிலிலிருந்து வந்த நண்பர் ஆனந்தனும் அங்கோர்வாட் கோவிலை நினைவு படுத்தினார்கள்.மீண்டும் செடி கொடிகளிடையே புகுந்து சுற்றி வந்தேன்.கண்டேன் அக்னி தேவனை! ஈசனை வழிபடும் அக்னிதேவனின் ஒற்றை சிற்பம் தானே என்னை இங்கு இழுத்து வந்தது.




திருவலம் கோவிலில் உள்ள கல்வெட்டின் படி கங்க அரசர் விஜய நந்தி விக்ரவர்மன் பெயரால் கங்கராஜபுரம் என்று அழைக்கப்பட்ட இந்த ஊர் விக்ரமசோழர் வரை கொடையளித்து சிறப்புடன் வழிபடப்பட்ட இறைவன் எப்போது கரும்புக்காட்டின் நடுவே தேடும் நிலைக்கு ஆளானாரோ ?

எங்கிருந்தோ வந்து புதைந்த கோவிலை சுற்றி வரும் எங்களை கரும்பு வெட்டுவோர் ஆச்சரியத்தோடு பார்க்க அந்த கோயிலை பற்றிய தகவலை சுருக்கமாக சொல்லி கொஞ்சம் செடிகொடிகளை அப்புறப்படுத்தி கோவில் கண்ணுக்கு தெரியுமாறு செய்ய உதவுங்கள் என்றேன்.


ஓரிரு நாட்களில் கரும்பு வெட்டும் வேலை முடிந்து விடும் அதன் பின் வாருங்கள் நிச்சயம் அனைவரும் சேர்ந்து செய்து தருகிறோம் என்றார்கள். அவர்கள் அளித்த உறுதி மனதை சிறிது ஆசுவாசப்படுத்த இந்த நிலை மாறும் என்ற நம்பிக்கையோடு புறப்பட்டோம்.